Friday, August 31, 2012

மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே--2

அல்லல் தன்னிலே ஆழும்  நெஞ்சமே
...அகலும் வழியிது கூறுவேன்
முல்லை நறுங்கொடி மூலம் தன்னையே
...முந்தி காட்டிய மூலவன்
'எல்லை யொன்றிலா ஏற்றம்  கொண்டவ
...எளியை நீயென இரங்குவன்
வல்லன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....6 


குளமார் கண்ணொடு குமுறும் நெஞ்சமே
...குறைகள் தீர்வழி சொல்லுவேன்
உளமார் உணர்வினில் உற்ற அன்பொடு
...உமையொர் பங்கனின் நினைவொடு
தளமார் வண்ணமாய் சாற்றும் பாமலர்
...தன்னில் தங்கிடும் இறையவன்
வளமார் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....7


விதியி தோவென வெம்பும் நெஞ்சமே
...வெல்லும் வழியிது சொல்லுவேன்
'கதியுன் தாள்'எனக் கத்தும் சிறுவனைக்
...காக்க மறலியை உதைத்தவன்
நதியும் மதியுடன் நஞ்சார் நாகமும்
...நயமாய் சடையில் அணிமுக
மதியன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....8


வீண்பி றவிச்சுழல் விட்டு வெளிவரும்
...விதத்தைச் சொல்லுவேன் நெஞ்சமே
பூண்ப .னணியெனப் பொன்னார் கொன்றையைப்
...பொங்கும் அலைநதி சடையினன்
காண்ப .னன்புறு கண்ணால் எளியரைக்
...காக்கும் வல்லவன் மறைதொழும்
மாண்பன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....9


சித்த மலமதில் திகைக்கும் நெஞ்சமே
...தெளியும் வழியினைச் சொல்லுவேன்
வித்தில் மரமென விறகில் தீயென
...வெளியில் தெரிந்திடா திருப்பவன்
பித்த .னவன் திருப் பேரை உரைத்திடில்
...பீழையைத் தொலைத்திடும் இறையவன்
மத்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....10 


 

  

Wednesday, August 29, 2012

மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே (வட திருமுல்லைவாயில்) --1

மாசிலாமணியைத் தொழு நெஞ்சமே (வட திருமுல்லைவாயில்)
--------------------------------------------
(எழுசீர் விருத்தம் - 'மா விளம் மா விளம் மா விளம் விளம்' என்ற வாய்பாடு)


துன்னும் இடரிடைத் துவளும் நெஞ்சமே
....துயரை வெல்வழி  சொல்லுவேன்
முன்னைப் பழையவன் மூல மானவன்
....முக்கண் நுதலினன் முடிவிலான்
தன்னை நினைப்பவர் தமக்குத் தயையினைத்
....தந்து காத்திடும் இறையவன்
வன்னன் வடமுல்லை வாயில் மாசிலா
....மணியைத் தொழவினை  மாயுமே....1
துன்னும்= சூழ்ந்துவரும்
வன்னம்=அழகு.

நொந்தி டரதனில் நோகும் நெஞ்சமே
...நொடியா வழியினை நுவலுவேன்
சுந்த ரன்கறை சூழ்ந்த கந்தரன்
...துங்க நதியுடை சடையினன்
வெந்த நீறணி மெய்யன் முப்புரம்
...வேவ சினமுற விழித்தவன்
மைந்தன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....2


விஞ்சும் இடரினில் வீழும் நெஞ்சமே
...விலகும் வழியினைக் கூறுவேன்
கஞ்ச மலர்ப்பதம் கருதும் அன்பரைக்
...கனிவோ டருளிக் காப்பவன்
நஞ்ச மமுதென நாடி விண்ணவர்
...நலத்தை எண்ணியே உண்டவன்
மஞ்சன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....3


சிரமம் தொடர்ந்திடச் செய்யும் துன்பதும்
...தீரும் வழியிது நெஞ்சமே
மரக தாம்பிகை வாமம் கொண்டவன்
...மன்றில் ஆடிடும்  வல்லவன்
மரம தடியமர் மாத வத்தினன்
...மவுன மாயருள் செய்பவன்
வரதன் வடமுல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....4


பள்ள மேடுகள் பற்றும் வாழ்விதில்
...படிந்து இடருறும் நெஞ்சமே
விள்ள லாகவொர் வெண்ணி லாவுடன்
...வேக மிகுநதி அணிபவன்
அள்ளி வழங்கிடும் அன்பில் கனிபவன்
...ஆடல் மன்றினில் புரிகிற
வள்ளல் வட
முல்லை வாயில் மாசிலா
...மணியைத் தொழவினை மாயுமே....5
 

 

Saturday, August 18, 2012

திரு நின்ற வூர்-- 2

ஆடினான் எரிகான் மன்றில் அழலிடை ஒருவன் என்றே 
தேடினார் முடிதாள் அன்று திகைத்திட உயர்ந்தான் தீயாய் 
வாடினார் இசையில் வெல்ல வந்தவொர் விறகா ளாகிப் 
பாடினான் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....6

சேவையன் பொடுசெய் வாரின் தீந்தமிழ்ப் பாவில் தங்கும் 
கோவையன் றொருவன் சீறிக் கோலினால் வீச ஏற்கும் 
தேவையென் றுமுன்னக் காப்பான் திகழுறு வாம பாகப் 
பாவையன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....7

ஊர்த்தவ தாண்ட வம்செய் உத்தமன் அடியார் தம்மின் 
சீர்த்தநற் றுணையாய் நின்று தீவினை விளைக்கும் துன்பைத் 
தீர்த்தவன் உமைதன் ஆகம் சேர்த்தவன் மதன்நீ றாகப் 
பார்த்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....8

பொங்குமன் பாலுள் ளத்தில் பூசலார் எடுத்த கோவில் 
தங்குவன் எளியர்க் கென்றும் தயையினை வழங்கும் வள்ளல் 
எங்கணும் நிறைந்தி ருப்பான் இடமாய் உமையைக் கொண்ட 
பங்கினன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....9
 
 எங்கணும்=எங்கும்.

சுற்றமும் சொந்த பந்தத் தொடரெனும் தளைகள் மீட்கும் 
உற்றவன் உயிரை அன்பில் உய்ப்பவன் அடியார் நண்ணும் 
நற்றவன் குருவாய்ப் பாரில் நலம்பல மாந்தர் கொள்ளப் 
பற்றுவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....10 


Monday, August 13, 2012

திருநின்றவூர்-- 1
-----------------
(அறுசீர் விருத்தம் - 'விளம் மா தேமா' - அரையடி வாய்பாடு)
(திருநின்றவூர் - பூசலார் நாயனார் வாழ்ந்த தலம்) 

துடைப்பவன் வினைசெய் துன்பை; துய்யமெய் அன்பில் வேண்டக்
கிடைப்பவன்; குருவாய்க் கல்லால் கீழமர்ந் தருளும் தேசாய்க்
கடப்பவன் யுகத்தைக் காலமாய்ச்  சுழன்றிட ஓட்டிப் பாரைப்
படைப்பவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே. ...1

சேந்தவன் நீல கண்டம் திகழொளி நீற்ற னாக
ஆய்ந்தவன் மறைகள் நான்கும் அடியவர் உள்ளக் கோவில்
ஏய்ந்தவன்; மாணிக் காக இயமனை சினத்தால் எற்றிப்
பாய்ந்தவன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே....2
சேந்த=சிவந்த


மறைந்தவன் அருள்செய் கின்ற வகையினில் அடியார் நெஞ்சம்
நிறைந்தவன் பூச லாரின் நினைவினில் எழுந்த  கோவில்
உறைந்தவன் ஆதி அந்தம் ஒன்றுமில் லாத ஐயன்
பறந்தலை ஆடு வான்தம் பதிதிரு நின்ற வூரே....3


எண்பொலி எழுத்தைந் தென்றும் எண்ணிடும்  அடியர்க் கன்பன்
ஒண்பொலி முக்கண் நெற்றி  உடையவன்  மறைகள் தன்னைப்
பண்பொலி இசையாய் ஓதிப் பரவுவார் துன்பைத் தீர்க்கும்
பண்புடை ஐயன் மேவும் பதிதிரு நின்ற வூரே....4


குவித்திடு கரங்கள் கொண்டு குவிந்திடும் மலர்கள் தூவத்
தவித்திடத் துயர்செய்  ஊழைச் சாடியேத் தீர்க்கும் ஐயன்
கவித்திடு முடியாய்க் கொன்றைக் கவினுறச் சடைமேல் சூடும்
பவித்திரன் மேவு கின்ற பதிதிரு நின்ற வூரே...5.


 


Wednesday, August 8, 2012

திருவேடகம் -- 2

ஒருபுன லிடுதமிழ் உயர்ந்தெதிர் ஏடக
தருநிழல்  அமர்ந்தருள் வீரே
தருநிழல் அமர்ந்தருள் வீரும தடிதொழ
இருவினைத் துயரதும் இலையே....6


விரைநதி  யிடுதமிழ் வென்றடை ஏடக
வரைமக ளொருபுடை யீரே
வரைமக ளொருபுடை ஈருமை தொழுதிடப்
புரைமலி பவமதும் போமே....7


விசையுறு புனலெதிர் வெல்தமிழ்  ஏடக
இசைவிழை செவியுடை யீரே
இசைவிழை செவியுடை யீரும கழல்தொழும்
இசைவுடை யோர்க்கிலை இடரே....8


கோலநல் லிசைத்தமிழ்க் கூடவை ஏடக
நீலகண் டமதுடை யீரே
நீலகண் டமதுடை யீரும  தடிதொழ
சீலமு டன்வரும் தெளிவே....9


உய்ந்நெறி காட்டிடும் ஒண்டமிழ் ஏடக
மெய்ந்நெறி யேஉகப்  பீரே
மெய்ந்நெறி யேஉகப் பீருமை உன்னுவர்
கைதொழு தடைவருன் கழலே....10