தணலார் விழியன் சடைசேர் மதியன்
மணமாய் மலராய் வரமாய்க் கனிவான்
கணமே நினைவில் கருதின் அவனே
துணையாய் வருவான் தொழுவாய் மனமே...1
சுகமும் துயரும் தொடரும் நிழலாய்
இகமீ தினிலே இறையுன் பதமே
புகலாய் அடைவேன் புனிதா எனவே
அகமே உறைவான் அறிநீ மனமே...2
துணியாய் பிறைசேர் சுருளார் சடையன்
அணியாய் நெளியும் அரவேற் றிடுவான்
பிணியாய் வினைசூழ் பிடியே அகலப்
பணிவாய் அரனின் பதமே மனமே...3
புனலே வளிவான் புவியே கனலே
எனவே அடியார் இசைவாய்ச் சரமாய்ப்
புனையும் கவியில் பொலியும் இறைதாள்
தனையே நிதமும் தரிநீ மனமே...4
உலவும் பிறையோ டுரகம் பொலிவாய்
நிலவும் தயையில் நிறையும் குழகன்
இலதென் றுளதென் றெவையும் சிவனே
வலவன் துணைதாள் வரிநீ மனமே.
வயசு கோளாறு
1 year ago
3 comments:
நல்ல தோடகம்.
அன்பு கீதா வாங்க!
நன்றிங்க!
உங்க வலையையும் பார்க்கிறேன்.
சிறப்பா எழுதறீங்க!வாழ்த்துகள்!
நன்றி!கீதா!
ஆமாம்.முதுமை சுமைதான்.
நம் மனப் பக்குவத்தால் எளிதாக்கிக்கலாம்னு
நினைக்கிறேன்.
Post a Comment