Friday, April 29, 2011

நாடகனுக்குத் தோடகம்

தணலார் விழியன் சடைசேர் மதியன்
மணமாய் மலராய் வரமாய்க் கனிவான்
கணமே நினைவில் கருதின் அவனே
துணையாய் வருவான் தொழுவாய் மனமே...1

சுகமும் துயரும் தொடரும் நிழலாய்
இகமீ தினிலே இறையுன் பதமே
புகலாய் அடைவேன் புனிதா எனவே
அகமே உறைவான் அறிநீ மனமே...2

துணியாய் பிறைசேர் சுருளார் சடையன்
அணியாய் நெளியும் அரவேற் றிடுவான்
பிணியாய் வினைசூழ் பிடியே அகலப்
பணிவாய் அரனின் பதமே மனமே...3

புனலே வளிவான் புவியே கனலே
எனவே அடியார் இசைவாய்ச் சரமாய்ப்
புனையும் கவியில் பொலியும் இறைதாள்
தனையே நிதமும் தரிநீ மனமே...4

உலவும் பிறையோ டுரகம் பொலிவாய்
நிலவும் தயையில் நிறையும் குழகன்
இலதென் றுளதென் றெவையும் சிவனே
வலவன் துணைதாள் வரிநீ மனமே.

Monday, April 18, 2011

திருஒற்றியூர்!

இருளென நாளெனவும்
உருளுமிப் பூவுலகில்
குருசிவன் ஒற்றிநினை
வருவினை அற்றிடுமே...6.

பையர வேயணி
மெய்யனி னொற்றியை
நைவினை இற்றிடக்
கைதொழு துய்வரே...7.

இலம்செயும் தீங்கழி
சிலம்பொலி தாளனின்
பலம்தரும் ஒற்றியை
வலம்வர பெற்றியே...8.

இலம்=வறுமை.
பெற்றி=பெருமை.

பயம்கொள எற்றியே
இயமனை செற்றவன்
நயம்தரு ஒற்றிசேர்
பயனதும் வெற்றியே...9.

நியாயமே செய்பவன்
தியாகரா சன்பெயர்
தியானமே செய்திட
கியாதிசேர் ஒற்றியே...10.

கியாதி= புகழ்.

Friday, April 15, 2011

திருஒற்றியூர்!

கற்றிலா ரெனினுசீர்
ஒற்றியூர் அரன்பதம்
பற்றியே தொழுதிடச்
சுற்றமோ டுயர்வரே....1

உலைவெலாம் அற்றிட
நிலவுசேர் உச்சியன்
மலையனார் ஒற்றியை
வலம்வர பெற்றியே...2


உலைவு=சஞ்சலம்.
உச்சி= உச்சந்தலை.
பெற்றி= பெருமை.

எந்தையாம் ஒற்றியூர்
செந்தழ லன்பதம்
வெந்துயர் தீர்த்தருள்
தந்திடும் மெய்யிதே...3

நற்றவன் ஆதியின்
ஒற்றியை நாடிடச்
சுற்றிடும் ஏதமும்
அற்றிடும் ஓர்கவே...4

ஏதம்=துன்பம்.

அண்ணியன் அன்பினுக்குக்
கண்ணுதல் ஒற்றிநகர்
எண்ணுக என்மனமே
நண்ணிடும் நன்மைகளே...5

Tuesday, April 12, 2011

வண்ணப் பாடல்!

திருநின்றவூர்
=============
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன தத்ததன .. தந்த தான


கத்துமொலி தத்துதிரை சுற்றிவரும்
....இத்தரையி லுற்றவுயிர் அத்தனையும்
....உத்தமநின் சத்தியினில் வைத்திடுவை....மங்கைபாகா
எத்தனைவி தப்பிறவி யுற்றழுது
....மத்துறுத யிர்க்கடைத லுற்றநிலை
....அப்பிலெழு மொக்குளென விட்டழிய....நொந்தபோதும்
நித்தியமில் மித்தையறு அத்தனுனை
....உத்திநிறை சித்தமொடு பற்றிடவும்
....நித்தமுநி னைத்துரைசெய் அக்கரமொர்....ஐந்துமானாய்!
புத்தமுத நற்கவிதை இக்குநிகர்
....சொற்றமிழில் நெக்குருக வைத்தமறை
....பெற்ற தவர் நிற்பணியும் பொற்புடைய....நின்ற ஊரே!

Tuesday, April 5, 2011

அடைவார்வினை அறுமே

மணியேசுடர் ஒளியேஅரு வுருவேசிவ பரமே
தணியாத உன் சினத்தால்நுதல் விழியால்மதன் எரித்தாய்
அணியார்கழல் பதம்நாடிடத் திருநீற்றினைத் துலங்க
அணிவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....6.

நறைபூமலர்ச் சரமீசனின் திருத்தோளினில் இசைய
பிறைசூடிடும் சடையோன்கழல் செயுமாடலைக் கண்டு
நிறைவாகிய மனமோடிறை அரன்பேர்புகழ் வாயால்
அறைவார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....7.

இகத்தேபெறும் துயர்யாவையும் துகைத்தோட்டிடும் எம்மான்
செகத்தேஉள அடியார்மனக் குடிலேஉறை தெய்வம்
மிகத்தானெனக் கருளேசெயும் இறைவாஎன வேண்டும்
அகத்தார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....8.

தமர்தானென எமர்தானென உய்ர்ந்தாரெனச் சாடும்
சமர்மேவிய புவிமீதமை உறுசாந்தியைத் தருவோன்
நமர்தான்சிவ பஞ்சாக்கரன் திருப்பாதமே நம்பி
அமர்வார்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....9

சுமையாகிடும் வயதாகிட வருவானரன் துணையாய்
நமையாளுமெய் இறையோனவன் திருத்தாளினை நாடி
இமையோரவர் அருளேயென நறும்பூமலர் இட்டே
அமைவோர்வினை அறுமேஇனி இலையோர்பிறப் பவர்க்கே....10.