
(திருமுக்கால் அமைப்பில்)
திருநிறை மதுரையில் அருள்தரு சிவனவன்
மருவுறு மலரணி வோனே
மருவுறு மலரணி வோன்கழல் மனங்கொள
வருதுயர் அழிவது நிசமே....1
பணியணை மதுரையில் கயல்விழி உமையரன்
துணிபிறை சடையுடை யோனே
துணிபிறை சடையுடை யோன்கழல் தொழுதிட
தணியுறு வினையது சதமே....2
பணி அணை = பாம்பு அணையாகச் சூழ்ந்த மதுரை
அறமலி மதுரையில் கலைவளர் நிதியவன்
திறமிகு நடமிடு வோனே
திறமிகு நடமிடு வோன்கழல் சிரம்கொளப்
புறமிடு வினையதும் பொடியே....3
மறைபுகழ் மதுரையில் வளர்தமிழ் விழைபவன்
பிறைமிளிர் சடையுடை யோனே
பிறைமிளிர் சடையுடை யோன்கழல் பிறவியின்
நிறைவினைத் தருமொரு நெறியே....4
புகழ்மிகு மதுரையில் முறைசெயு மிறையவன்
திகழ்மதி புனைசடை யோனே
திகழ்மதி புனைசடை யோன்கழல் சிரம்கொள
மகிழ்வுறு நிலையதும் வசமே....5
1 comment:
படிக்கப் படிக்க வியப்பாய் இருக்கிறது. ஆழ்ந்த தமிழ்ப் புலமையோடு கூடிய ஞானம்.
Post a Comment