Friday, February 25, 2011

மதுரை!


பொழில்நிறை மதுரையில் விழவினில் திகழ்பவன்
எழில்விழி நுதலுடை யோனே
எழில்விழி நுதலுடை யோன்கழல் விழைவுற
உழ்ல்வினை அகன்றிடும் உடனே....6

புனல்தவழ் மதுரையில் புகல்தரும் துணையவன்
கனல்தவழ் கரமுடை யோனே
கனல்தவழ் கரமுடையோன்கழல் கருதிட
மனம்கொளும் உயர்வுறு மதியே....7

வலம்பெறு மதுரையில் விடையமர் மறையவன்
பொலம்திகழ் திருவுடை யோனே
பொலம்திகழ் திருவுடை யோன்கழல் புணையெனும்
பலம்தரும்;அறும்தொடர் பவமே....8

வயம்நிறை மதுரையில் வரம்தரும் இறையவன்
கயல்விழி உமைபுடை யோனே
கயல்விழி உமைபுடை யோன்கழல் கைதொழல்
மயல்தரு வினையறும் வழியே....9

மொய்வள மதுரையில் சிறந்திட முறைசெயும்
மெய்புனை பொடியுடை யோனே
மெய்புனை பொடியுடை யோன்கழல் விழைவுற
எய்திடும் உயர்வதும் எளிதே....10

மொய் = பெருமை.

Wednesday, February 23, 2011

மதுரை!


(திருமுக்கால் அமைப்பில்)

திருநிறை மதுரையில் அருள்தரு சிவனவன்
மருவுறு மலரணி வோனே
மருவுறு மலரணி வோன்கழல் மனங்கொள
வருதுயர் அழிவது நிசமே....1

பணியணை மதுரையில் கயல்விழி உமையரன்
துணிபிறை சடையுடை யோனே
துணிபிறை சடையுடை யோன்கழல் தொழுதிட
தணியுறு வினையது சதமே....2

பணி அணை = பாம்பு அணையாகச் சூழ்ந்த மதுரை

அறமலி மதுரையில் கலைவளர் நிதியவன்
திறமிகு நடமிடு வோனே
திறமிகு நடமிடு வோன்கழல் சிரம்கொளப்
புறமிடு வினையதும் பொடியே....3

மறைபுகழ் மதுரையில் வளர்தமிழ் விழைபவன்
பிறைமிளிர் சடையுடை யோனே
பிறைமிளிர் சடையுடை யோன்கழல் பிறவியின்
நிறைவினைத் தருமொரு நெறியே....4

புகழ்மிகு மதுரையில் முறைசெயு மிறையவன்
திகழ்மதி புனைசடை யோனே
திகழ்மதி புனைசடை யோன்கழல் சிரம்கொள
மகிழ்வுறு நிலையதும் வசமே....5

Sunday, February 13, 2011

பெற்ற பயன்!

செவியில் மணியொலிக்கத் தேவன் அருள்வேண்டிக்
குவியும் அடியவர்க் கூட்டம்-- கவியுமெய்
அன்பில் அகப்படும் ஆண்டவன் நாமத்தை
நம்பி செபிக்குமென் நா.

நானா விதப்பூவில் நற்றூபப் பூசனையில்
ஆனாத அன்பருளும் ஆண்டவன் -- வானார்ந்தத்
தீச்சுடர்க் கற்பூரச் செம்மணக் காற்றையே
மூச்செனக் கொள்ளுமென் மூக்கு

மூக்கின் உயிர்ப்பினில் மூங்கில் துளைப்பண்ணில்
நாக்கின் மொழியினில் நம்பனுளான் -- பாக்களில்
ஆழ்ந்த பொருளாய் அருள்பவன் தாளிடை
வீழ்ந்து பணியுமென் மெய்.

மெய்யினில் வெண்ணீறு மேவிட அஞ்சலருள்
கையில் கனலேந்தும் கைலாயன் -நைய
அலைந்திடும் ஓடுடை அரனின் தயையே
நிலையாய் நினையுமென் நெஞ்சு.

நெஞ்சில் நினைந்து நெடுஞ்சாண் கிடையாகத்
தஞ்சமவன் என்றே சரணடைவம்--விஞ்சையருள்
புனிதன் தாளினைப் போற்றிப் பணியும்
மனிதப் பிறவி சிறப்பு.

Wednesday, February 9, 2011

பெற்ற பயன்!

பெற்ற பயன் - (ஒருபா ஒருபஃது)
------------------------------------
(அந்தாதியாக மண்டலித்து வரும் 10 நேரிசை வெண்பாக்கள்)

சிறப்புறத் தில்லையில் செய்நடம் பேறாம்
பிறப்பிறப் பொன்றிலாப் பெம்மான்!-- மறைப்பாத்
திறக்கும் திருக்கதவம் தெய்வசம் பந்தன்
கறைக்கண்டன் தாள்தொழுமென் கை.

கைலைப் பதியவன் காலனைச் செற்றவன்
மெய்யருள் செய்யும் விமலனாம்!-- தையலாள்
மைவிழி தேவி மகிழ்நன் தலந்தொறும்
கைதொழச் செல்லுமென் கால்.

காலெடுத் தாடிடும் கம்பீரன் நீலனாம்
மாலயன் காணா மலையொளியாம்!-- பாலனாம்
வேலவன் தாதைக்கு விண்ணோர் இறைவனுக்குச்
சாலவும் தாழும் தலை.

தலையில் அலைநதி தாங்கிடும் அண்ணல்
கலைமதி ஆர்பரன் காப்பான்! -- குலைவில்
நிலையுறு பக்தியில் நிற்கும் சிவனைக்
கலிதீரக் காணுமென் கண்.

கண்ணுதல் தெய்வக் கருணை நெகிழ்வுற
எண்ணிட ஓடிடும் இன்னலாம்-- பண்ணொடு
சேர்கிற இன்னிசையில் செஞ்சடையன் வான்புகழ்
சீர்தனைக் கேட்கும் செவி.