Saturday, December 25, 2010

திருப்பரங்குன்றம்!

பிணிஊழ்ப் பிடிநீங்க
மணிஆர் மதிதன்னை
அணிவான் அடிநாடிப்
பணிவாய் பரங்குன்றே....6

விரைநன் மலர்தூவி
குரைசெய் கழல்பாடும்
பரமன் அடியார்கள்
பரவும் பரங்குன்றே....7

குரை= ஒலி
விரை= மணம்.

திங்கள் சடைக்கன்பர்
துங்கத் தமிழ்பாடும்
மங்கை உமையாளின்
பங்கன் பரங்குன்றே....8

பெற்றம் அமர்வோனாம்
நெற்றி விழியானைச்
சுற்றம் எனுமன்பர்
பற்றும் பரங்குன்றே....9


துகளாய் வினைதீர்க்கும்
புகலாம் கழல்வேண்டின்
இகமாய்ப் பரமாகும்
பகவான் பரங்குன்றே....10

Monday, December 13, 2010

திருப் பரங்குன்றம்.

புளிமா புளிமாங்காய்(வஞ்சித்துறை)

பொலிவெண் பொடிசூடும்
பலிதேர் பரங்குன்றன்
நலிவாம் நவைதீர்ப்பான்
வலிகொள் மனந்தந்தே....1.

புரியா மயல்தீரப்
புரிநீ மடநெஞ்சே
விரியார் சடை ஈசன்
பரிவான் பரங்குன்றே....2.

சிரமோர் மதிசூடி
கரமோர் அருளாசி
வரமாய்த் தருமீசன்
பரமன் பரங்குன்றே... 3.

நண்ணா வினைத்துன்பம்
பெண்ணோர் புறங்கொண்டான்
நண்ணி நினைநெஞ்சே
பண்பன் பரங்குன்றே...4.

பொதியாம் வினைத்தீரப்
பதிவாய் மனமேநீ
கதிதாள் பெறச்செய்யும்
பதியாம் பரங்குன்றே....5.

Friday, December 3, 2010

ஆலவாய் அண்ணல் - (திருஆலவாய்) - 2



விதித்த வாழ்வும் வெருதா கிடாதுளம்
பதித்த நாமம் பரவினால் உய்யலாம்
கதித்து ஆடுவான் கழலிணைக்(கு) அன்பராய்த்
துதித்த வர்துயர் தீர் ஆல வாயரே....6.

கதித்து=விரைந்து

மாலை வண்ணனாய் மன்றதில் ஆடிடும்
நீல கண்டனாய் நெஞ்சுறைத் தெய்வமாய்ச்
சூலை நோயுறு தூயடி யார்க்கருள்
ஆல வாயுறை அங்கண் அடிகளே....7.

கல்லேன் பொன்னார் கழல்தொழு துய்வழி
வல்லான் இன்னருள் வள்ளலென்(று) ஏத்திலேன்
பொல்லாத் தீவினைப் பொடியெனச் செய்குவன்
நல்லார் போற்றும்நம் ஆலவாய் நாதனே....8.

ஆர்=அழகு என்னும் பொருளில்

கால காலனாய்க் கண்ணுதல் அண்ணலாய்க்
கோல மாகவேக் கொண்டிடும் ஆடலை
ஞால முய்ய நடித்தநம் ஐயனாம்
ஆல வாயரற் கன்புசெய் நெஞ்சமே....9.

சேவி லூர்பவன் சிந்தையில் நிற்பவன்
கூவி யன்பர் குரல்கொடுத் தாலுமே
தாவி வந்தருள் தந்திடும் மெய்யனாய்
ஆவி காப்பவன் ஆலவாய் அண்ணலே.....10.

(கலிவிருத்தம்)