நல்லிசை பாடல் நாளும் சிவநாமம் சொல்லும்
...நமவாதை யாவு மழியும்
தொல்வினை யாலே தோன்றும் துயரான தென்றும்
...தொலைந்தோடும் ஈச நருளால்
கல்லெனும் போதும் பூவாய் அணிந்தாளும் நம்பன்
...கதியாகி அன்பில் அணைவான்
வல்லியை வாமம் கொண்ட மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!
மடலவிழ் பூவில் கோத்த அழகான மாலை
...மணமோடு தோளில் அசைய,
சுடலையின் நீறு பூசி நமையாளும் ஐயன்
...துணயாகி நாளும் அருள்வான்!
நடமிடு கோலம் காணும் அடியாரின் அன்பன்
...நலமாகும் வாழ்வு தருவான்!
மடமயி லாளின் பங்கன் மணிநீல கண்டன்
...மலர்த்தாளை ஏத்து மனமே!