Friday, February 20, 2009

முடுகியல் பாடல்!

பெருமைவளர் முருகுதவழ் பெருநிதியம் கிருதிவழி
உருகிமகள் பரதமிடும் ஒருநடமும் பெருகிவரும்
துரிதகதி சரஒலியும் சுரலயமும் இயம்புதலில்
திருநிறையும் குருவருளும் தெருளுறவும் தருமுயர்வே!

Tuesday, February 17, 2009

சக்தி துதி!

மாங்காடு கோயிலுறை மங்கலத்தாய் காமாட்சி
தீங்(கு)ஓட நன்றுசெய்யும் தெய்வமவள்!-- பாங்கான
பூங்காவின் பூமணமாய்ப் பூக்கின்ற சக்தியவள்
ஓங்காரி உத்தமியென்(று) ஓது.

Friday, February 6, 2009

வெண்ணிலவே!



(அரையடி-- மா காய் காய்)

> வெள்ளித் தகடெனவே விண்வெளியில்
> ...மிளிரும் வடிவழகே! வெண்ணிலவே!
> கொள்ளை இளமையுடன் கூடிடுவாய்!
> ...கோடி யுகங்களிலும் தோன்றிடுவாய்!
> துள்ளும் சிறுவயதில் சொந்தமடி!
> ...துணையாய் முதுமையிலும் வந்திடுவாய்!
> உள்ளம் களித்திருப்பேன் நீவருவாய்!
> ...உருவில் குறைந்துவளர் வெண்ணிலவே!

> அன்புடன்,
> தங்கமணி.

Monday, February 2, 2009

அம்மானை

அம்மானை

ஏறுமயில் வாகனனார் ஏறுகந்தார் தம்குருவாம்
மாறுபடு கோல மலையர்காண் அம்மானை
மாறுபடு கோல மலையரே ஆமாகின்
வேறுபடு கோலத்தின் மேன்மையென்ன அம்மானை?
ஆறுதலை கொண்ட அருளாளர் அம்மானை