Wednesday, November 27, 2013

தேன்மலர் மாலைகள் தோளினில் சூடித் --திகழ்ந்திடும் அம்பல வாணன் பங்கில்
கூன்பிறை நெற்றியள் கொண்டான் --கும்பிடு வாருளம் நிற்பான்
தான் தனி யாய்சுடு கான் தனில் ஆடும்-- தாண்டவன் விண்ணதித் துங்க கங்கை
பான்மதி ஆர்சடை மீது -- பாம்பணி எம்பெரு மானே....7

ஆடி மகிழ்ந்திடும் தில்லையின் கோனை -- அண்டிய பேர்க்கிலை துன்பம் வாழ்வில்
நாடி நல்லருள் செய்வான் -- நம்பிடும் அன்பரின் நேயன்
சூடி டும்பிறை மிளிர்சடை கொண்ட -- துய்யபொற் பாதனின் ஊராம் வண்டு
பாடி  சோலை சூழும் -- பாம்பணி நன்னகர் தானே. ..8


அங்கையில் ஊனார் தலைக்கலன்  ஆக -- ஐயம் ஏற்றிடச் சென்று தேர்வான்
செங்கனல்  கானினில் ஆடும் -- சேவடிப் போற்றுவார்க் கன்பன்
அங்கணன் தாள்முடிக் கண்டிட ஒண்ணா(து) -- அன்றயன் மால்முனர் தீயாய் நின்றான்
பங்கொரு மாதமர் கின்ற -- பாம்பணி எம்பெரு மானே....9

காய்சின வேங்கையின் ஈருரி கொண்ட -- கண்ணுதல் வேளெரி செய்த ழித்தான்
தூய்மதி சூடிய தேசன் -- தொண்டர் மனத்துள் நிற்பான்
வாய்மொழி நான்மறை ஓதிடும் எம்மான் -- வார்சடை யான்பதி சேல் துள்ளிப்
பாய்புனல் சேர்வயல் சூழும் -- பாம்பணி நன்னகர் தானே....10
 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான வரிகள் அம்மா...

வாழ்த்துக்கள்...

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பல்லாண்டு வாழ்க! படா்கின்ற புத்தாண்டை
நல்லாண்டு வாழ்க நலஞ்சூடி! - வல்லதமிழ்ச்
சொல்லாண்டு வாழ்க! சொந்தமென நம்மினத்தின்
தொல்லாண்டு வாழ்க சுடா்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

01.01.2014

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்

சந்தவசந்தம் மின்வலையின்
பெயரை அறியத் தரவும்.

Thangamani said...

https://groups.google.com/forum/?hl=en&fromgroups=#!forum/santhavasantham

அன்புள்ள கவிஞர்கி. பாரதிதாசனாருக்கு,
வணக்கம்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
அருமையான வெண்பா அளித்தமைக்கு மிக்கநன்றி.
சந்தவசந்தம் மின்வலையின் பெயர் தந்துள்ளேன்.பார்க்கவும்.
அன்புடன்,
தங்கமணி.

Thangamani said...

அன்புள்ள தனபாலன்,
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
உங்கள் கருத்துக்கு மிக்கநன்றி.
தாமதமாக மடலைப் பார்த்தேன்.
வருந்துகிறேன்.

அன்புடன்,
தங்கமணி.