Saturday, October 26, 2013

பாம்பணி--திருப்பாதாளீச்சரம் ---பாமணி --3

அம்பல மாடும் குரைகழல் பாதன் -- அன்பரை ஆட்கொளும் மெய்யன் ஐயன்
வெம்புலி தோலுடை யாக-- விண்ணதி கொன்றையை சூடும்
சம்புவி .னஞ்சக் கரமுரைப் பாரைத்-- தாங்கிடு வான்பதி வண்டு மொய்க்கும்
பைம்பொழில் சூழ்ந்தழ காரும் .. பாம்பணி நன்னகர் தானே....4

உச்சியில் வெண்மதிக் கண்ணியைச் சூடும்-- ஒப்பிலி யானவன் செய்யன் ஐயன்
நச்சை அமுதாய் உண்ட-- நம்பன் அடியவர் அன்பன்
பச்சை நிறத்துமை யாளவள் காந்தன் --பற்றிடு வார்க்குறு தாள ளிக்கும்
பச்ச முடைப்பரன் எந்தை  -- பாம்பணி எம்பெரு மானே....5

வெயிலினில் வீசுமென் மாருதம் போல -- வெவ்வினைத் துன்பதை தீர்க்கும் அன்பில்
அயிலுடை சூலம் ஏந்தி--அன்பர்க் கருள்செயும் வள்ளல்
மயிலன சாயல் எழிலுமை பங்கன் -- மானுடை கையன் ஊர தென்பார்
பயிர்வளர் செய்புடை சூழும் -- பாம்பணி எம்பெரு மானே....6


Saturday, October 19, 2013

பாம்பணி - திருப்பாதாளீச்சரம்--பாமணி(இக்கால வழக்கில் )

தண்ணிறை வெண்பனி சூழ்மலை மன்னன் -- சஞ்சலம் தந்திடும் துன்ப றுக்கும்
பெண்ணுமை பங்கினன் வேளை-- தீயெரி யாகிடச் செற்றான்
பண்ணிய மோடிசை வாய்நடம் செய்யும்--பார்வதி நாயகன் தன்னூர் வண்டு
பண்ணிசை ஆர்பொழில் சூழும் -- பாம்பணி நன்னகர் தானே....2

ஆலமர் செல்வனை 'ஆ'வது முட்ட-- மெய்வடு கண்டதும் ஆட லன்றோ
ஆல மருந்திவிண் ணோரைக்  --காத்த கறைநிறை கண்டன்
கோல நிலவுடன் பாயலை கங்கை--கொன்றையும் பாங்குடன் உச்சி  சூடி
பாலன நீறுமெய் பூசும்-- பாம்பணி எம்பெரு மானே....3

 அடி 1-இல் - " 'ஆ'வது முட்ட-- மெய்வடு கண்டதும்..... "

( சுகலமுனிவர் வளர்த்த (காமதேனு) பசுவானது சிவலிங்கத்தின்மீது
அபிடேகமாகப்பாலைப்பொழிந்தது. முனிவர் தனக்குப் பால் குறைந்து விடுமே என்று
 பசுவைக் கோபித்து அடித்தார்.அந்தப் பசு வருந்தி,வழிபட்டதால்
 தனக்கு நேர்ந்த நிலையை உணர்த்துவது போல சிவலிங்கத்தை முட்டி ஓடி
 பசுபதி தீர்த்தத்தில் விழுந்து இறந்தது.இறைவன் காட்சிதந்து பசுவை உயிர்ப்பித்தார்.
பசு முட்டியதால் மூலத்திருமேனியில் மூன்று வடுக்களோடு காட்சிதருகிறார்.0

Thursday, October 17, 2013

பாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)

பாம்பணி எம்பெருமான் (பாம்பணி - திருப்பாதாளீச்சரம்) (இக்கால வழக்கில் 'பாமணி'. இத்தலம் மன்னார்குடிக்கு அருகே உள்ளது)
=================================================
  (சம்பந்தர் தேவாரம் - 1.39.1 – திருவேட்களம்.
'அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்தி லங்க'

குறிப்பு: பாம்பணி - பாம்பணி என்ற ஊர். (அவ்வூரில் உள்ள கோயிலின் பெயர் திருப்பாதாளீச்சரம்). 'பாம்பை அணியும்' என்றும் பொருள்கொள்ளலாம்.




தானன  தானன தானன  தான ... தானன  தானன  தான தான (1&3)

தானன தானன தான ... தானன தானன தான  (2&4)
அடி (1&3)--விளம் கூவிளம் கூவிளம் தேமா/ கூவிளம் கூவிளம் தேமா தேமா /

அரையடி -1எ /3எ :4சீர்கள்.---வெண்டளை விரவிவரும்.
அரையடி 1பி /3பி :4சீர்கள்.--அவற்றுள் முதல்மூன்று சீர்களிடை வெண்டளை விரவும்.
இவ்வரையடியில் 1பி &3பி யில் 3ஆம் சீர் குறிலில் முடியும்.
4ஆம் சீர் குறிலில் தொடங்கும்,3+4 சீர்கள் =  கூவிளங்காய் ஆகும்.
அடி 2&4 -- விளம் கூவிளம் தேமா/ விளம் கூவிளம் தேமா.
                    அரையடி 2எ/4எ :3சீர்கள் - வெண்டளை விரவும் 
                     அரையடி 2பி /4பி : 3சீர்கள் -- வெண்டளை விரவும்.
(அரையடிக்குள்  விளம் வரும் இடத்தில்  தேமா,புளிமா, கருவிளம் 
இவற்றுள் ஒன்றும் வரலாம். அப்படி வரின்  மற்ற சீர்களும் மாறி வெண்டளை பயிலும்.

 கோரிடு மன்பரின் துன்புகள் தீர்க்கும்-- குஞ்சர ஈருரி ஏற்ற மைந்தன்
காரொடு நேர்கறை கண்டன் -- கங்கையை சூடிய செம்மல்
சீரொடு நன்றையும் செய்திடும் சீலன் -- செங்கழ லானருள் தன்னை நண்ணி
பாரொடு  விண்பணிந் தேத்தும் --பாம்பணி எம்பெரு மாளே....1