Sunday, April 20, 2014

என் பணி அரன் துதி!

 
என்றென்றும் அரன் பணியில் !



 

திருமதி  T.V.தங்கமணி 

 

தோற்றம்  : 05-10-1939        மறைவு  : 28-03-2014



------------------------------------------------------------------------------------------------------
காரைக்கா லம்மையெனக் கனிந்தபக்தை  இவர்போல
யாரைக்காண் போம்இனிநாம்? அனுதினமும் கண்ணுதலான்
சீரைத்தம் செய்யுள்வழி செப்பியவந்த அன்னையைத்தன்
ஊரைத்தான் காண்பிக்க உளம்கொண்டான் ஐயனுமே.

.. அனந்த் -   28-3-2014

------------------------------------------------------------------------------------------------------

எங்குமணி யாகவரா ஏறுமரன் கடல்நஞ்சம்
தங்குமணி கண்டத்தன் தண்மதியைத் தலைவைத்தான்
தங்கமணி என்றுசொல்லத் தக்கவர்செந் தமிழ்பாடு
தங்கமணி மாமியைத்தன் தாள்நிழலில் வைத்தானே.

... வி. சுப்பிரமணியன்  28-3-2014

--------------------------------------------------------------------------------------------------------
வயதினைக் கருதிடாமல்
வாலிபப் பருவத்தார்போல்
முயற்சியைப் பெற்றிருந்தார்
முனைப்புடன் யாப்பைக் கற்றே
அயர்ச்சியே இன்றி இங்கே
யாத்தனர் கவிதை, அன்னார்
இயக்கமோர் எடுத்துக் காட்டாய்
இளைஞர்கட்  கிருந்த துண்மை!

இலக்கி யத்தில் ஊறியதால்
இளமை பெற்ற தங்கமணி
கலங்க டிக்கும் நோய்களையும்
கலங்க டித்த பேராளார்
நிலைத்த  புகழைப் பெற்றுள்ளார்
நெஞ்சில் என்றும் பாசத்தை
இலக்காய்க் கொண்ட கவிஞருக்கு
எங்கள் இதய அஞ்சலிகள்.

... இலந்தை
--------------------------------------------------------------------------------------------------------


அம்மையார்  தங்கமணி  ஆண்டவன்  அருளால் அன்னான்
செம்மைசேர்  நாமம்பாடித்   திருவடி யடைந்தசேதி
எம்மையும்  அதிரச்செய்தே  ஏக்கத்தை  உருவாக்கிற்றே
இம்மையில்  தவத்தைச் செய்த  இனியநம் அம்மைக்கிங்கே ,
தம்மைநே ரில்லா அந்தத்  தலைவன்தண் னருளைப் பெய்தே
அம்மையில் அம்மைபாட அருகமர்ந்  திணித்து கேட்டே 
மும்மையும்  புகழில் ஏற்றி   முறையருள்  புரிக இன்றே!
நம்மைநாம் தேற்றிக் கொள்ளும் நன்மனம்  நல்கிநிற்க!
 
... புலவர் இராமமூர்த்தி
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சிவ நினைவுடனேயே இருந்தவர்.

பிரதோஷ கால நேரத்திலேயே அவரைச் சிவன் தன்னடிக்கீழ் அமர்த்தியமையை என்னென்று சொல்லுவது! அவர் பக்தியை எப்படி மெச்சுவது?

அவருடைய உறுதியில் ஆயிரத்தில் ஒரு பங்கேனும் நமக்கு அருளும் படி அவரை வேண்டுகிறேன்.

என்றும் எமதுள்ளத்தில் இருந்து எம்மை வழி நடத்த வேண்டுகிறேன்.

 - sankara dass
--------------------------------------------------------------------------------------------------------------

blog related contact email id: akilacsr2715@gmail.com / ramasamis@yahoo.co.in