Wednesday, November 27, 2013

தேன்மலர் மாலைகள் தோளினில் சூடித் --திகழ்ந்திடும் அம்பல வாணன் பங்கில்
கூன்பிறை நெற்றியள் கொண்டான் --கும்பிடு வாருளம் நிற்பான்
தான் தனி யாய்சுடு கான் தனில் ஆடும்-- தாண்டவன் விண்ணதித் துங்க கங்கை
பான்மதி ஆர்சடை மீது -- பாம்பணி எம்பெரு மானே....7

ஆடி மகிழ்ந்திடும் தில்லையின் கோனை -- அண்டிய பேர்க்கிலை துன்பம் வாழ்வில்
நாடி நல்லருள் செய்வான் -- நம்பிடும் அன்பரின் நேயன்
சூடி டும்பிறை மிளிர்சடை கொண்ட -- துய்யபொற் பாதனின் ஊராம் வண்டு
பாடி  சோலை சூழும் -- பாம்பணி நன்னகர் தானே. ..8


அங்கையில் ஊனார் தலைக்கலன்  ஆக -- ஐயம் ஏற்றிடச் சென்று தேர்வான்
செங்கனல்  கானினில் ஆடும் -- சேவடிப் போற்றுவார்க் கன்பன்
அங்கணன் தாள்முடிக் கண்டிட ஒண்ணா(து) -- அன்றயன் மால்முனர் தீயாய் நின்றான்
பங்கொரு மாதமர் கின்ற -- பாம்பணி எம்பெரு மானே....9

காய்சின வேங்கையின் ஈருரி கொண்ட -- கண்ணுதல் வேளெரி செய்த ழித்தான்
தூய்மதி சூடிய தேசன் -- தொண்டர் மனத்துள் நிற்பான்
வாய்மொழி நான்மறை ஓதிடும் எம்மான் -- வார்சடை யான்பதி சேல் துள்ளிப்
பாய்புனல் சேர்வயல் சூழும் -- பாம்பணி நன்னகர் தானே....10