Thursday, April 25, 2013

ஆத்தூர்-- 2

பெயலாய் அருளைப் பொழியும் பெம்மான் பெண்ணோர் இடங்கொண்டான்
மயலார் வாழ்வில் தெளிவைத் தருவான் மறைகள் தொழுமீசன்
வெயிலாய் வெம்பக் காற்றாய் வீசும் அன்பன்  பதியென்பர்
கயலார் புனல்பாய் பொருநைத் தென்பால் வயலார் ஆத்தூரே....6

தகழி ஒளிரத் தூபம் கமழத் தண்பூ மலர்சூடி
முகிழும் அருளில் இடர்கள் செய்யும் முந்தை வினைதீர்ப்பான்
நிகழும் தீம்பும் நீங்க  முறைசெய் நிமலன் பதியென்பர்
புகழும் தமிழின் ஓசை என்றும் திகழும் ஆத்தூரே....7

வில்லாம் மலையில் கணையைக் கோத்து விடுத்தான் புரம்வேவ
பொல்லா வினைசெய் இடரை தீர்த்துப் புகலைத் தந்தாள்வான்
எல்லா நலமும் அளிக்கும் வள்ளல் எம்மான் பதியென்பர்
சொல்லூர் தமிழால் துதிப்போர் திரளும் நல்லூர் ஆத்தூரே....8

கண்டம் கறையன் நுதல்சேர் விழியன் கங்கை மதிசூடி
அண்டம் யாவும் இயக்கி ஆளும் அண்ணல் அடிபோற்றும்
தொண்டர் தம்மின் அன்புதெய்வம் துய்யன் பதியென்பார்
 விண்ட மலரை வண்டு நாடி மண்டும் ஆத்தூரே.

காவா யென்றே கூவு வோனைக் காக்க அருள்செய்தான்
நாவா யாகப் பவத்தைக் கடக்க நம்பன் கழல்நாடிப்
பூவாய்த் தூவிப் பணிவோர்த் தெய்வம் புனிதன் பதியென்பார்
நாவார் தமிழால் போற்றும் ஓசை ஓவா ஆத்தூரே....10


Friday, April 12, 2013

ஆத்தூர்--1

ஆத்தூர்
--------------
அறுசீர் விருத்தம் - 'மா மா மா மா மா காய்' என்ற வாய்பாடு.
1-5
சீர்களில் மோனை.பாடல்தோறும் ஈற்று அடியில் 5-ஆம் சீரில் எதுகை அமைந்துள்ளது.

வானூர் மதிசேர் சடையில் கொன்றைச் சரமும் அணியாகும்
ஊனார் முடையாய் நாறும் தலையில் உண்ணும் பலித்தேர்வான்
மீனார் விழியாள் உமையோர் பங்கன் மேவும் பதியென்பார்
வானீர்ப் பொருநைத் தென்பால் மகிழும் தேனார் ஆத்தூரே....1

வால வயது சிறுவற் கருள மறலி யுதைசெய்த
கால காலன் விண்ணோர் வாழ கடலின் விடமுண்ட
சூலம் ,மழுவாள் தீ,மான் ஏந்தும் துய்யன் பதியென்பர்
நீல வண்டு தேனார் பொழில்சூழ் கோல ஆத்தூரே....2

பழிசேர் வினையால் விளையும் துன்பப் பாட்டை விடுவிப்பான்
இழிவான் நதியை சடையில் வாகாய் ஏற்ற சிவநாதன்
விழிஆர் நீரோ டுருகும் நெஞ்சில் மிளிர்வான் பதியென்பார்
சுழிநீர்ப் பொருநைத் தென்பால் பொழில்சூழ் எழிலார் ஆத்தூரே....3

 சிரமும் கலனாய் ஏந்தி பலிக்குத் திரியும் மதிசூடி
அரவும் நதியும் சடைமேல் திகழ அணிந்து மலர்கோத்தச்
சரமும் சூடி எளியர்க் கருள்செய் தலைவன் பதியென்பர்
இரவும் பகலும் ஏத்தும் அன்பர் விரவும் ஆத்தூரே....4

ஈம எரியில் ஆடல் புரியும் ஈடில் தழலாடி
நாமம் சொல்லத் தேனாய் இனிக்கும் நாளும் தொழுதுய்ய
சேம நிதியாய் நின்று காக்கும் தேவன் பதியென்பர்
பூமன் .னெழிலார் பொழில்கள் புடைசூழ் காமர் ஆத்தூரே....5