Tuesday, June 16, 2009

நின் தாள் புகல்!


என்றென்றும் தீனர்க்(கு) இரங்கியருள் செய்திடுவாய்
என்றுன்னை வேண்டிநின்றேன் ஈஸ்வரியே!-- இன்றெங்கும்
காணுகின்ற தீங்குகளைக் கண்டும்நீ தீர்க்கவில்லை!
பூணுகின்ற நின் தாள் புகல்.

Tuesday, June 9, 2009

மன்று ளானை வேண்டுவம்!

இளம்பிறை அணிந்தவன் இரங்கிடும் பரஞ்சுடர்
...எந்தை அன்பை நினைந்தின்பு கொள்வமே
களம்கறை அணிந்தவன் கனிந்தருள் வழங்கிடும்
...கால காலன் பதந்தன்னை வாழ்த்துவம்!!
உளம்நிறை வடைந்திட ஒளிர்ந்திடும் திகம்பரன்
...உந்து பாத நடம்தன்னை ஏற்றுவம்!
வளம்தரும் அவன்துணை வரம்தரும் தினம்தொழ
...மன்று ளானை மனம்கொள்ள வேண்டுவம்!

வேசங்கள் உன்றன் விருப்பு.

வந்தியின் பிட்டுக்கு மண்சுமந்தாய்!உன் தோழன்
சுந்தரர் சொற்படி தூதுசென்றாய்!--எந்தையே!
ஏசல்கள், ஆடல்கள், எண்ணிடக் கூடுமோ?
வேசங்கள் உன்றன் விருப்பு.

Saturday, May 30, 2009

முருகனைப் பாடுவோம்!

மலைதொறும் உறைபவன் மறைதொழும் கடம்பனை
...மாலின் செல்வ மருகோனைப் பாடுவோம்!
கலைமதிச் சடையனின் கதிர்நுதல் விழியருள்
...கந்தன் செவ்வேள் முருகோனைப் பாடுவோம்!
தொலைதரு வினைகளின் தொடரினைக் களைந்திடச்
...சுற்றும் வெல்வேல் கரத்தானைப் பாடுவோம்!
நிலைபெறும் அருளினில் நிறைவினைத் தருகென
...நெஞ்சில் நிற்கும் பெருமாளைப் பாடுவோம்!

Wednesday, May 27, 2009

பெம்மானே!அருள்வாய்!

ஆட்டிவைக்கும் ஆடவல்லோய்!ஆடுகின்றாய்!உன்னருளில்
கூட்டுவித்தத் தொண்டருள்ளம் கொண்டாடப்--பாட்டுவித்துக்
கேட்டுவக்கும் பெம்மானே! கேடனைத்தும் நீங்கநலம்
காட்டுவித்தால் பாருய்யும் காண்.

Wednesday, May 13, 2009

தாயன்பு!

துறவிகளும் அன்பாய்த் தொழுதிடுவர் தாயை;
கறவையினம் காத்தவனைக் கட்டும்-- திறமுடையத்
தாயன்பிற்(கு) கெல்லையுண்டோ? சக்தியுரு வாகிடுவாள்
கோயிலுறைத் தெய்வமெனக் கூறு.

கறவையினம் காத்தவன்=கோபாலன்
கட்டும் தாயன்பு=யசோதையின் அன்புக் கட்டுக்கு

Tuesday, April 14, 2009

சீர்பேசி உய்தல் சிறப்பு.


மண்ணுலகை வாழ்விக்க வந்துதித்த ராமனையே
எண்ணிநிதம் பண்பாடி ஏற்றிடுவோம்!-- வண்ணமதில்
கார்மேகம் மாரியெனக் காத்தருளும் பண்பாளன்
சீர்பேசி உய்தல் சிறப்பு.

Sunday, April 12, 2009

அஞ்சலென்று காட்சியருள் வேலவா!


(108 எழுத்துகள் அல்லது அட்டோத்தர சதாக்கரம்)

எழுசீர் விருத்தம்.
(108 எழுத்துகள் அல்லது அட்டோத்தர சதாக்கரம்)
ஆறு கூவிளங்காய் கூவிளம்
ஆறு தானதன தானனா

தேடிவரும் அன்பரெல்லாம் தீந்தமிழ்*ப்*பா மாலைகளைச்
சீர்பெறவே சூட்டிடுவர் வேலவா!
ஓடிவரும் தேனருவி உன்புகழை ஓசையிட்டே
உச்சரித்துப் பாய்ந்துவரும் வேலவா!
கூடிவரும் பக்தியினில் குன்றுதொறும் காண்பதற்கு*க்*
கூவியுன்னை வேண்டிடுவேன் வேலவா!
ஆடிவரும் தோகைமயில் அன்னைதந்த வேலுடனே
அஞ்சலென்று காட்சியருள் வேலவா!

Friday, April 10, 2009

அண்ணா மலையாம் அருணசிவம்!


எண்ணா திருப்பினும் இன்னருள் செய்திடும்
அண்ணா மலையாம் அருணசிவம்!-- விண்ணாய்
விரிந்துயர் கோபுரம் விந்தைமிகக் கண்ணால்
தெரிந்திடக் காட்டும் சிவம்.

Wednesday, April 1, 2009

அன்னைகாமாட்சியின் திருக் கோலம்!


பொன்னில் ஒளிரிழை புதுமலர்ச் சரங்கள்
...பொலியத் திகழும் அழகோடு
கன்னல் சிலைமலர்க் கணைகரம் அணைத்து*க்*
...கருணை பொழியும் விழியாளே!
மின்னல் கொடியென மிளிர்ந்திடும் இறைவி!
...வியந்து மனத்துள் தொழுகின்றேன்!
இன்னல் தருவினை இடரதும் தொலைய
...இணைபூம் பதமே சதமென்பேன்!