Thursday, November 29, 2012

திருக்கானூர்-- 2

எஞ்சும் நாளில் முதுமையினில்
    ....இடர்கள் பலவும் பட்டுழல
    அஞ்சும் காலன் வருமுன்னே
    ....அரன்பேர் போற்றி அடைநெஞ்சே
   பிஞ்சு நிலவும் பேரலையாய்
    ....பெருகும் நதியும் கொன்றையுமே  
    குஞ்சி வைத்தான் உறைகோவில்
    ....கொள்ளி டஞ்சூழ் கானூரே....3

ஆறு தலதை விழைமூப்பில்
....அண்டும் துன்பம் எத்தனையோ
நீறு புனைந்து நெகிழ்ந்துருகி
....நேயன் போற்றி அடைநெஞ்சே
ஆறு சடையன் ஆலின்கீழ்
....அமரும் தவம்செய் போதமருள்
கூறும் ஒருவன் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....4

Tuesday, November 27, 2012

திருக்கானூர்--- 1

திருக்கானூர்
----------------------------
(
அறுசீர் விருத்தம் - 'மா மா காய்' - அரையடி வாய்பாடு)
திருக்கானூர் - இத்தலம் மேலைத்திருக்காட்டுப்பள்ளியிலிருந்து சில கிலோமிட்டர் தொலைவில், கொள்ளிட நதிக்கரையில் அமைந்துள்ளது.

 தளைத்து வினைசெய் யிடர்தீர்க்கும்
...சடையன் செந்தாள் மலர்பற்றிக்
களத்தில் விடத்தைக் கொண்டருளும்
...கதியே எனநீ  அடைநெஞ்சே
தளத்தில் வெளியில் நடம்செய்யும்
...தனியன் புரத்தை நகையாலே
கொளுத்தும் ஈசன் உறைகோவில்
...கொள்ளி  டஞ்சூழ் கானூரே....1

தளம்=மேடை, வெளி=ஆகாசம்.
களம்=தொண்டை.
தனியன்=ஒப்பில்லாதவன்.

இறைவன் ஈசன் என்றுணர்ந்து
....ஏத்திப் பணியும் அன்பர்க்கு
நிறைவைத் தருமே நிமலன் தாள்
....நினைந்து அடைநீ மடநெஞ்சே
நறைசேர் மலரால்  நன்மாலை
....நயமாய்ச் சூடும் நம்பனவன்
குறைகள் தீர்ப்பான் உறைகோவில்
....கொள்ளி டஞ்சூழ் கானூரே....2

நறை=தேன்.

Sunday, November 18, 2012

மழபாடி வயிரத்தூண் --5

உயர்வென்றும் தாழ்வென்றும் உருளும் வாழ்வில்
...உத்தமன் தாள் தொழுபவர்க் குய்வைத் தந்தே
துயர்செய்யும் இருவினையைத் தொலைப்பான் தன்னைச்
...சோதிபொங்கும் அருணமலை சுடரா னானைச்
செயல்தன்னில் விளைவாகத் திகழ்வான் தன்னைச்
...சீராக  அண்டமெல்லாம் செலுத்து வானை
வயல்சூழும் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....9

தூமதிசேர் வார்சடையன்  துணைத்தாள் பற்றித்
...தொடுத்தமலர்க் கொன்றைத்தார் சூட்டிப் போற்றின்
தாமதியா  தருள்செய்துத் தாங்கு வானைத்
...தருநீழல் அமர்மோனத் தவசி தன்னைச்
சேமநிதி யாயிடரைத் தீர்க்கும் தேவைச்
...சேவூரும் பெம்மானை, சீலன் தன்னை
மாமதில்சூழ் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....10

Friday, November 16, 2012

மழபாடி வயிரத் தூண்-- 4

அரவுநெளி  மேனியினில் அழகு சேரும்
...அலங்கலென கொன்றைமலர் அணிகின் றானை
விரவிடுமென் மணத்தூபம் மேவு வானை
....விடையூரும் திருஇலகும் வெண்ணீற் றானை
இரவலுடல் தனிலுயிர்க்குள் இருக்கும் தேசை
...இறைஞ்சிடுவார் தமதன்புக் கிரங்கு வானை
வரமருளும் மழபாடி வயிரத் தூணை
,,,வாயார வாழ்த்தவினை மாயும் தானே. ...7

மண்டுமிசை  வாசகத்தேன் வழுத்தும் கோவை
...வற்றாத அருள்வழங்கும்  வள்ளல் தன்னை
வெண்டிரைமீ தெழுவிடத்தை விழுங்கி னானை
...விண்ணோர்கள் தொழுதேத்தும் விமலன் தன்னை
தண்டலைசூழ் மயிலாடச் சாரல் காற்றுத்
...தவழ்மணம்சேர் தேன்மலரில் தங்கி யுண்ணும்
வண்டுமுரல் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....8


Tuesday, November 13, 2012

மழபாடி வயிரத்தூண்-- 3

சிந்திக்கும் சிந்தையுள் தேசா வானைச்
...சீர்மல்கும் பேரானை செம்மல் தன்னை
விந்தைக்குள் விந்தைதரும் வேடம் மேவி
...வேணவிதம்  அருள்செய்யும் விமலன் தன்னைச்
சந்தத்தில் மலர்கின்ற தமிழா னானைச்
...சங்கரனை நாவலூரர் சாற்றிப் பாட்டால்
வந்திக்கும் மழபாடி வயிரத் தூணை
...வாயார வாழ்த்தவினை மாயும் தானே....5

எழுவானில் உயர்தீயாய் இலங்கு வானை
....எளியோரின் அருள்நிதியாய் இரங்கு வானை
வழுவாத அன்பினுக்கு மகிழும் தேவை
....மலைமகளின் கேள்வனை மன்றன் தன்னைத்
தொழுவாரின் துயர்தீர்க்கும் துணையா வானைச்
....சுந்தரர்க்குத் தூதுசென்றத் தூயோன் தன்னை
மழுவானை மழபாடி வயிரத் தூனை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....6

மன்றன்=சிவன்

Friday, November 9, 2012

மழபாடி வயிரத்தூண்-- 2

ஆர்வருவார் ஆர்செல்வார் அறிவார் யாரே
....ஆரமுதாம் நஞ்சுண்டன் அனைத்தும் உய்ப்பான்
கார்முகிலாய்ப் பொழிகின்ற கருணை வெள்ளம்
....கழல்பற்றி அருள்வேண்டின் கதியா வானைப்
பார்முதலாம் கண்ணுதலை பலித்தேர் வானைப்
....பரிந்துயிர்க்காய் ஆடுவானைப் பண்ணார் வண்டு
வார்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....3
 
மின்னலிடை உமையவளை மெய்யில் பங்காய்
....மேவியவன் துணைதன்னை வேண்டும் அன்பர்
பொன்னவனை நாண்மலரால்  புனைந்துப் போற்றிப்
....பூசிக்கும் பூசனையில் பொலிகின் றானை
இன்னமுதென் றாலமுண்ட ஈசன் தன்னை
....இணையில்லாச் செல்வமென இலங்கு வானை
மன்னவனை மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....4

Thursday, November 8, 2012

மழபாடி வயிரத்தூண்-- 1

மழபாடி வயிரத்தூண்
=====================
 (எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' - அரையடி வாய்பாடு)



வெண்பொடியார் மேனியனாய் விளங்கு வானை
....வேணியினில் கூன்பிறையை அணிகின் றானைக்
கண்பனிக்க உள்ளுருகக் கரைந்து வேண்டிக்
....கரங்கூப்பித் தாள்தொழுவார்க் கன்பன் தன்னைத்
தண்பதிகள் பலகண்டு சாற்றும் பத்தர்
...தண்டமிழ்ப்பா மாலைதனில் உவக்கின் றானை
வண்பதியாம் மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....1


பாம்பணியும் கறைமிடறன் பதம்செய் யாடல்
....பரவசமாய்க் கண்டுவக்கும் பத்தர் தம்மின்
தீம்பழிய நன்றுசெயும் தேவ தேவைச்
....சீராரும்  தேவாரம் செவியேற் பானைத்
தீம்பலவும் குலைநிறைந்தத் தெங்கும் ஓங்கத்
....தீங்குயில்கள் கிளையமர்ந்து தேனாய்ப் பாடும்
மாம்பொழில்சூழ் மழபாடி வயிரத் தூணை
....வாயார வாழ்த்தவினை மாயும் தானே....2


Thursday, November 1, 2012

உனை நினைத்திடும் அகத்தினை அருள் (திருக்கழுமலம்) --2

குவைத்திரள் மணிச்சுடர் சுவைக்கனி உனைத்தொழும்
...குவிக்கையில் மதுப்பொழி .. மலர்தூவி
பவத்தளை விடுத்திடும் அருட்புனல் விழிக்கதிர்
...படைத்தவ கழற்புணை..தருவாயே
தவத்தினில் நிசப்தமும் ஒலித்திடும் குருத்துணை
...தனைப்பெறு நலத்தினை.. அருளாயே
சிவத்துறு அறத்துணை உமைக்கருள் கொடுப்பவ
...திருக்கழு மலத்துறை.. பெருமானே!