Tuesday, November 1, 2011

தாயுமானவனே!--2

துண்டு வெண்மதி கங்கை சூடிடும் செஞ்சடை அண்ணல்
செண்டு நாண்மலர்த் தொடையல் திகழுறு எழில்மிகு தோளன்
பண்டு மிண்டரும் வெருவப் பார்வையை இழந்திட விழிகள்
தண்டி யாரவர்க் கன்று தந்தநம் தாயுமா னவனே....3

* கண்ணில்லாத தண்டியடிகள் திருவாரூரில் குளத்தில் திருப்பணி செய்வதற்கு
இடையூறு செய்த சமணர்கள் எல்லாரும் கண்ணிழந்து அஞ்சும்படியும்
தண்டியடிகளுக்குப் பார்வை கொடுத்தும் திருவருள் புரிந்த நிகழ்ச்சியைச்
சுட்டியது.
தண்டியார் - தண்டி அடிகள்; (அறுபத்துமூன்று நாயன்மாருள் ஒருவர்; பிறவிக்குருடராக
இருந்தவர்);

உண்ட வன்தயை என்றே உருகியே துதித்திடும் பத்தி
மண்டும் அன்பரின் தமிழ்ப்பா மாலைகள் சூடிடும் ஐயன்
தண்டு வீசிட வாளாய்த் தந்தையின் தாளற வீழ்த்தும்
சண்டிக் கன்றுயர் தானம் தந்தநம் தாயுமா னவனே....4

சிவபூசைக்கு இடையூறு செய்த தந்தையின் கால்களைச் சிதைத்த விசாரசருமர்க்குச்
சண்டேசுர பதவி அருளியதைச் சுட்டியது.

4 comments:

tvthangamani said...

உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்கநன்றி ராஜா!
உங்கள் வலைப்பூவை வந்து பார்க்கிறேன்.

Geetha Sambasivam said...

பண்டு மிண்டரும் வெருவப் பார்வையை இழந்திட விழிகள்

இது எந்த விளையாடலைக் குறிக்கிறது எனப் புரியவில்லையே? :(

Thangamani said...

அன்புள்ள கீதா,
சிவசிவா சிறப்பாக பத்துப் பாட்டிற்கும் விளக்கம் கொடுத்துள்ளார்.
அவருக்கு நன்றிசொல்லி அவற்றை இங்கு இடுகிறேன்.
உங்களுக்கும் எளிதாகப் புரியும்.
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றியுடையேன்

Geetha Sambasivam said...

தண்டியாருக்குப்பார்வை தந்தது எனக்குப் புதிய தகவல். நன்றி அம்மா. பெரியபுராணத்திலும் பார்த்துக்கறேன்.