Thursday, August 26, 2010

ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!-- 4

விரியும் சடையில் கொன்றை தும்பை
...விண்நீர் கங்கை மதியும் சூடி
கரியின் தோலை உடையாய் ஏற்கும்
...கடவுள் தானாய் அடிமை கொண்ட
பரிவின் திறத்தை நாவ லூரர்
...பதிகத் தாலே போற்றி செய்தே
உரிய அன்பில் கண்டு கொண்ட
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

Tuesday, August 24, 2010

ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே! --3

மண்டை யோட்டில் பலியைத் தேரும்
...மங்கை பங்கன் வேடம் ஏற்றிக்
கொண்ட அன்பில் கூடும் உணர்வில்
...கும்பிட் டிறைவன் தாளை எண்ணும்
தொண்ட ரென்றும் தமிழ்த்தேன் பூவாய்த்
...தொடுத்த பாக்கள் வரமாய்த் தோன்றி
உண்ட ருளென்னும் எம்மான் ஈசன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!

Monday, August 23, 2010

ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!--2

சுற்ற மென்றும் சொந்த மென்றும்
...சூழும் பந்தம் காடு மட்டும்
நற்ற வன் தாள் பற்றிக் கொண்டால்
...நன்மை என்றும் வந்து சேரும்
பெற்றம் ஏறும் பெம்மான் போற்றின்
...பேறாம் உய்வை அருளும் அன்பில்
உற்ற புகல்தந் தாளும் ஈசன்
...ஓண காந்தன் தளிசேர் நெஞ்சே.

Sunday, August 22, 2010

திருஓண காந்தன் தளிசேர் நெஞ்சே!--1

எண்சீர் விருத்தம் - '8 மா' வாய்பாடு.
1௫ சீர்களில் மோனை.


தலமும் புகழும் இசைக்கும் அன்பர்
...சகல உயிரின் உய்வை எண்ணி
மலரும் புகைகொள் தூபம் கொண்டு
...மனதும் நெகிழப் போற்றி னாரே!
விலகும் வினையும் தூசைப் போல
...விடையோன் அருள்வான்!ஓமென் றோதும்
ஒலியில் நிறைவாய் நிற்கும் வேதன்
...ஓணகாந்தன் தளிசேர் நெஞ்சே!

Sunday, August 15, 2010

சிவனைதுதி மனமே!--10

வெய்யவல் வினையில் நைவதென் நிதமும்
...வென்றிடும் வழியை நன்கறிந் திடுவாய்;
துய்மலர் அலங்கல் கைதொழு (து)இடவே
...துன்பமும் விலகும் இன்பமும் மலரும்
பெய்கழல் பணிந்தால் எய்ப்பது மறையும்
...பிஞ்ஞக னவனின் அஞ்செழுத் தைநினை
மெய்தனில் இடங்கொள் மைவிழி உமையின்
...வெண்மதி சடையன் நண்ணிடு மனமே.

எய்ப்பு=தளர்வு

சிவனைத்துதி மனமே!--9

தரிசென வாழ்ந்து மரித்திட லாமோ?
...சகமிதில் வாழும் தகவினைக் கேளாய்;
எரிதவழ் கானில் புரிநட மேற்றும்
...இறையடி யார்கள் மறையெனப் பாக்கள்
வரிசையில் தேனார் பரிசினில் தந்த
...வகையினை ஓர்ந்தே அகமகிழ் வோடு
சொரியருள் தேவைப் பரிவுடன் எண்ணி
...துதிபுகழ்ப் பாடி கதிநினை நெஞ்சே.

தரிசு= உபயோகமில்லாத நிலம்

Saturday, August 14, 2010

சிவனைத்துதி மனமே!--8

புனைசடை தன்னில் புனைமலர் சூடி
...புடையுமை பங்கன் நடமதைச் செய்யும்
கனைகழல் வேண்டின் வினைதனை மாய்க்கும்
...கருணைசெய் தெய்வம் குருவவன் போற்று!
தினையள வேனும் நினைபவர்க் கும்தன்
...திருவருள் தன்னைத் தருமவன் அன்பில்
நனைபவர் தாமே தனமுடைச் செல்வர்?
...நலம்தரும் நாமம் வலம்தரும் நெஞ்சே.


புனைமலர் = புன்னைமலர் (இடைக்குறை)

Friday, August 13, 2010

சிவனைத்துதி மனமே! --7

குந்தகம் செய்யும் பந்தமாம் கட்டில்
...கொண்டிடு துன்பம் மண்டிடும் வேளை
இந்தினைச் சூடும் செந்தழ லோன் தாள்
...எண்ணிடத் தீரப் பண்ணிடு வானே!
முந்திடு அன்பால் இந்தனம் விற்ற
...ஒப்பிலாத் தேவைத் துப்பெனக் கொள்வாய்!
சுந்தரன் நஞ்சக் கந்தரன் தன்னைச்
...சுற்றமென் றேற்றிப் பற்றிடு நெஞ்சே!

துப்பு=பற்றுக்கோடு.

முந்திடு அன்பால் இந்தனம் விற்ற = இசைவாணன் பாணபத்திரனுக்காய் விறகு விற்பவனாய் வந்து, சிவபெருமான் அருளியது.

Thursday, August 12, 2010

சிவனைத்துதி மனமே!--6

சுட்டெரி ஒளிவீழ் விட்டிலின் நிலையில்
...துக்கமாம் மயலில் சிக்கிடும் மனமே!
கட்டெனும் வினையில் பட்டுழல் வதுமேன்?
...காத்திடு மிறைவன் பார்த்தருள் புரிவான்!
கொட்டிடு முழவில் தட்டிடும் துடியில்
...கூத்தனின் நடனம் சேர்த்திடும் இதமே!
மொட்டவிழ் மலர்கள் இட்டவன் பதத்தை
...முன்னிட தருவான் இன்னருள் தனையே.

முன்னுதல்=கருதுதல்

Monday, August 9, 2010

சிவனைத்துதி மனமே!-- 5

கன்றினுக் கெனவே மன்றினில் நியாயம்
...காத்திடு மனுவைக் காத்திடும் இறைவன்
கொன்றையம் மலரை பொன்முடி அணிந்து
...கொண்டிடும் தயையில் தொண்டனுக் கருள்வான்
ஒன்றவன் தழலாய் நின்றவன் உமையின்
...உற்றவன் மதனைச் செற்றவன் பதத்தை
நன்றென மனதில் என்றுமே நினைத்து
...நஞ்சுடை மிடறன் நெஞ்சுறு மனமே!

Saturday, August 7, 2010

சிவனைத்துதி மனமே!-- 4

உணர்வினில் பக்தி மணமது வீசும்
...உயர்வுறு பாடல் மயர்வறச் செய்யும்
தணலுருக் கொண்டான் கணங்களின் ஈசன்!
...தவவுரு மேவும் சிவகுரு போற்றி
இணைகழல் பற்றித் துணையவன் என்றால்
...இகமதில் நாளும் புகல்தரும் வள்ளல்
இணர்மலர் மாலை கொணர்ந்தவன் மார்பில்
...இலங்கிடச் சூட்டி நலம்பெறு நெஞ்சே.

மயர்வு=அஞ்ஞானம்.
இணர்=பூ,பூங்கொத்து

Friday, August 6, 2010

சிவனைத்துதி மனமே! --3

சிரமதில் கங்கை கரமதில் ஓடு
...திகழ்ந்திடு சாம்பல் உகந்திடு மேனி
சரமெனக் கொன்றை உரகமும் சூடி
...சவமெரி காட்டில் நவமுற ஆடும்
பரமனின் தாளை சரதமென் றெண்ணு!
...பவமதில் சூழும் அவமதைப் போக்கும்!
அரனவன் நாமம் வரமென வேற்றும்
...அடியவர் அன்பன் வடிவுறு நெஞ்சே.

Thursday, August 5, 2010

சிவனைத்துதி மனமே!-- 2

பதவியும் பேரும் சதமென லாமோ?
...பரமனின் அன்பே நிரந்தர மாகும்!
நுதலுடைக் கண்ணன் விதமவன் நாமம்
...நுவலுவர் என்றும் நவையினை வெல்வார்!
இதமதைச் சேர்க்கும் பதமதை எண்ணின்
...இயமனைச் சாடும்;பயமதைப் போக்கும்!
இதயமும் கோவில் உதயமாய்த் தோன்றும்
...இணையடி ஆகும் புணைநவில் நெஞ்சே!

Wednesday, August 4, 2010

சிவனைத் துதி மனமே!--1

(எண்சீர்ச் சந்த விருத்தம் - "விளம் மா விளம் மா விளம் மா விளம் மா " என்ற வாய்பாட்டை ஒட்டி அமைந்தது. அரையடிக்குள் சீர் எதுகை அமைந்த பாடல்கள்)
"கருவிளம் தேமா கருவிளம் தேமா

...கருவிளம் தேமா கருவிளம் புளிமா"

நிதியவன் நெஞ்சில் வதிபவன் என்றும்
...நெகிழ்வுறு அன்பில் திகழ்ந்திடு மனமே!
சுதிநிறை பண்ணில் துதியிசை தன்னில்
...சுகமுறு அன்பர் அகமதில் வருவான்!
கதியவன் என்று பதிகமும் சொல்லிக்
...கழலிணைப் பற்றின் பழவினை தீரும்!
புதியவன், கங்கை நதி,மதி சூடி
...புகழினை ஓது! இகமதில் நிறைவே!

Sunday, August 1, 2010

திருப் பாதிரிப்புலியூர்-- 5


மின்னலெனும் வாழ்வுதனில் வினைவிளைக்கும் தீங்கழிப்பான்
உன்னவருள் புரிந்தடியார் உள்ளமுறை சோதியவன்
துன்னலர்தாம் நாவரசைத் துள்ளுதிரை இட்டாலும்
பொன்னடியைப் போற்றியடை பாதிரிப் புலியூரே ...9

வேதத்துள் ஒளிர்பவனாம் வினைதன்னைத் தீர்ப்பவனாம்
நாதத்தின் உருவுடையோன் நலம்தருதாள் நினைவிலப்பர்
ஏதத்தை புரிஅமணர் எறிதிரையிட் டாலுமரன்
பாதத்தைப் போற்றியடை பாதிரிப் புலியூரே ...10